மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் கடும் நடவடிக்கை காங்கிரஸ் எச்சரிக்கை
மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரு,
மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர்க்கொடி தூக்கியுள்ளனர்கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் கடந்த மாதம்(மே) பதவி ஏற்றனர். மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 25 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். மந்திரி பதவி கிடைக்காதவர்கள், காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல், எம்.டி.பி.நாகராஜ், பி.சி.பட்டீல் உள்ளிட்ட சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்களுக்கு மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்று வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுப்பதாக அவர்கள் கூறி வருகிறார்கள். இது காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கடும் எச்சரிக்கைஇந்த நிலையில் போர்க்கொடி தூக்கியுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தகையவர்களுக்கு வாரிய தலைவர் பதவிகூட கிடைக்காது என்றும் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் கூறி இருக்கிறார். கட்சியின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.