விளாத்திகுளத்தில் கருப்புக்கட்டி தயாரித்தபோது தீவிபத்து: 9 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ரூ.5 லட்சம் சேதம்


விளாத்திகுளத்தில் கருப்புக்கட்டி தயாரித்தபோது தீவிபத்து: 9 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ரூ.5 லட்சம் சேதம்
x
தினத்தந்தி 8 Jun 2018 9:15 PM GMT (Updated: 8 Jun 2018 7:34 PM GMT)

விளாத்திகுளத்தில் கருப்புக்கட்டி தயாரித்த போது ஏற்பட்ட தீவிபத்தில் 9 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

விளாத்திகுளம்,

விளாத்திகுளத்தில் கருப்புக்கட்டி தயாரித்த போது ஏற்பட்ட தீவிபத்தில் 9 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

சூறாவளி காற்று வீசியது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரநகரை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 70). இவர் பதனீரில் இருந்து கருப்புக்கட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் தனது ஓலைக்குடிசையிலான வீட்டில் வைத்து விறகு அடுப்பு மூலம் கருப்புக்கட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது பயங்கர சூறாவளி காற்று வீசியுள்ளது.

இதில் இருந்து கிளம்பிய தீப்பொறியானது, எதிர்பாராதவிதமாக அவரது குடிசை வீட்டில் பிடித்து தீப்பற்றிக் கொண்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றார். அவரது சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். உடனடியாக அங்கிருந்த அனைவரும் சேர்ந்து குடிசையின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

தீயில் எரிந்து சாம்பல்

அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கட்டுக்கு அடங்காமல் கொளுந்து விட்டு எரிந்து, அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் பரவியது. மேலும் இதுபற்றி விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து, குடிசைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனாலும் இந்த தீவிபத்தில் ரத்தினத்தின் குடிசை வீடு உள்பட அருகே உள்ள அந்தோணியம்மாள், அனுகூல பாண்டி, தங்கமாரியப்பன், ஜெயராஜ், சாலமோன் ராஜா, பவுல்ராஜ், ராஜபதி ஆகியோரது குடிசை வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலாகியது. மேலும் தங்கம்மாள் என்பவருடைய ஓட்டு வீடும் தீக்கு இரையானது.

அதிகாரிகள் பார்வையிட்டனர்

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் தாசில்தார் லெனின், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இந்த தீ விபத்தின் சேத மதிப்பீடு ரூ.5 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்து விளாத்திகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story