கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.2½ கோடி மோசடி செய்ததால் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தினோம் கைதான 3 பேர் போலீசில் வாக்குமூலம்
கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.2½ கோடி மோசடி செய்ததால் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தினோம் என்று கைதான 3 பேரும் போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.
கோவை,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜான் கோ பிடல் (வயது 45). இவர் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் அலுவலகம் அமைத்து, ரியல் எஸ்டேட், வீடு கட்டி கொடுப்பது மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். குறைந்த விலையில் வீடு கட்டி கொடுப்பதாகவும், இவருடைய நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கொடுப்பதாகவும் அறிவித்ததால் பலர் இவருடைய நிறுவனத்தில் பணம் செலுத்தினார்கள்.
அந்த வகையில் 100–க்கும் மேற்பட்டவர்கள் ரூ.42 கோடிக்கும் மேல் முதலீடு செய்தனர். அத்துடன் வீட்டுமனைக்காக பலரும் பணம் செலுத்தி இருந்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் முதலீடு செய்தவர்களுக்கு வட்டியையும், வீட்டுமனையையும் ஜான் கோ பிடலால் கொடுக்க முடியவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த கரிகாலன் (40) என்பவர் ஜான் கோ பிடல் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மற்றும் 36 பவுன் நகை ஆகியவற்றை முதலீடு செய்து இருந்தார். அவருக்கு மாதந்தோறும் வட்டி கொடுக்காததால், பணத்தையும், நகையையும் திரும்ப கேட்டார். ஆனால் அவர் திரும்ப கொடுக்கவில்லை.
இதுபோன்று சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பலரும் ஜான் கோ பிடல் நிறுவனத்தில் பணம் செலுத்தி இருந்தனர். அவர்களுக்கும் பணத்தை திரும்ப கொடுக்காததால் அவர்கள் கரிகாலனுடன் சேர்ந்து 2 கார்களில் வந்து ஜான் கோ பிடலை கடத்தி சென்றனர்.
இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஜான் கோ பிடலை போலீசார் மீட்டனர். மேலும் கடத்தலில் தொடர்புடைய தர்மபுரி மாவட்டம் பிடமனேரியை சேர்ந்த கார்த்திக் (36), ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த முருகன் (37), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையின்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–
கரிகாலன் மூலம் எங்களுக்கு ஜான் கோ பிடல் அறிமுகம் ஆனார். அவர் நடத்தி வந்த ஹவுசிங் சொசைட்டி நிறுவனத்தில் பணம்–நகை செலுத்தினால் மாதந்தோறும் கூடுதல் வட்டி கொடுப்பதாக அறிவித்தார். அதை நம்பி நாங்கள் 10 பேரும் ரூ.2½ கோடிக்கு நகை–பணம் செலுத்தினோம். சில மாதங்கள் மட்டுமே எங்களுக்கு வட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் வட்டி கொடுக்கவில்லை.
எனவே நாங்கள் அவரை தொடர்பு கொண்டு நாங்கள் செலுத்திய நகை–பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் அவர் அவற்றை திரும்ப கொடுக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டபோது, 7–ந் தேதி வாருங்கள் என்று கூறினார். அதன்படி நாங்கள் கரிகாலன் தலைமையில் 10 பேர் 2 கார்களில் கோவை வந்தோம்.
பின்னர் நாங்கள் அவருடைய அலுவலகத்துக்கு சென்று நகை–பணம் கேட்டோம். ஆனால் அவர் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். எங்கள் பணத்தை மோசடி செய்ததால் ஆத்திரம் அடைந்து அந்த அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து உதைத்தோம். பின்னர் ஜான் கோ பிடலை கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்தி செல்வதற்காக தூக்கி சென்றோம். அப்போது, அவருடைய நண்பர் மகேந்திரன் அங்கு வந்தார். இதனால் அவரையும் சேர்த்து கடத்தினோம்.
இதில் மகேந்திரனுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை அறிந்ததும் அவரை நாங்கள் கோவை அருகே இறக்கிவிட்டு சென்றோம். ஜான் கோ பிடலை மிரட்டி பணத்தை வசூலிப்பதற்காக தர்மபுரிக்கு கொண்டு செல்லும்போது ஓமலூர் அருகே போலீசார் எங்களை மடக்கி பிடித்து கைது செய்து விட்டனர். எங்களிடம் அவர் மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கரிகாலன் உள்பட 7 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சேலத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.