திருப்பூரில் மாநகராட்சி தொடக்க பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்
திருப்பூரில் மாநகராட்சி தொடக்க பள்ளிக்கு கல்வி சீர்வரிசையை பொது மக்கள் வழங்கினார்கள். அத்துடன் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆர்வமாக உள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
அனுப்பர்பாளையம்,
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த கல்வியாண்டில் வழக்கம் போல் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகளவு இருந்தது. இருப்பினும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் சேர்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த கவிதா லட்சுமி நகர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை 151 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது 1–ம் வகுப்பில் 39 மாணவ–மாணவிகள் மற்றும் 10 பேர் பிற வகுப்புகளிலும் இந்த ஆண்டில் புதிதாக சேர்ந்தார்கள்.
இந்த நிலையில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை அதிகரித்து வரும் மாநகராட்சி பள்ளியை உற்சாகப்படுத்தும் வகையிலும், அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து சிறந்த மாணவர்களாக உருவாக்கும் நோக்கத்திலும் பள்ளிக்கு தேவையான பொருட்களை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் வாங்கி கொடுத்தனர். இதை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் வகையில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதையொட்டி பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி, கணினி, பிரிண்டர், தண்ணீர் தொட்டி, சுவர் கெடிகாரங்கள், மின்விசிறி, மட்டை, பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் என சுமார் 100–க்கும் மேற்பட்ட பொருட்களை வழங்கினார்கள். முன்னதாக இந்த பொருட்களை அனுப்பர்பாளையம் ஏ.வி.பி. லே–அவுட் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலின் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
அத்துடன் மாணவ–மாணவிகள் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க மாணவ–மாணவிகள் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார். மேலும் பொதுமக்கள் வழங்கிய பொருட்களை கல்வி சீர்வரிசையாக பள்ளி தலைமை ஆசிரியையிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் கூறுகையில், அரசு பள்ளிகளில் வசதிகள் குறைவாக இருந்தாலும், அதை நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்களே பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பது வரவேற்கத்தக்கது. இதுபோல் அனைத்து பள்ளிகளிலும் செய்தால் எதிர்காலத்தில் அனைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் அரசு பள்ளிகளில் சேர்ப்போம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியின் தரம் உயர்ந்திருப்பதால் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர் ஆர்வமாக உள்ளோம் என்றனர்.