திருவேங்கடம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 45 பவுன் கொள்ளை: மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
திருவேங்கடம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
திருவேங்கடம்,
திருவேங்கடம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
51 பவுன் நகைகள் கொள்ளைநெல்லை மாவட்டம் திருவேங்கடத்தை அடுத்த புதுப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 30). ராணுவ வீரரான இவரது வீட்டில் சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் புகுந்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். இதேபோல், அந்த பகுதியில் உள்ள குறிஞ்சான்குளத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி வீட்டிலும் மர்மநபர்கள் 6 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த போலீஸ் ஏட்டு ராஜலட்சுமி வீட்டிலும், காசிலிங்கபுரத்தில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது. ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை அமைப்புஇந்த நிலையில், கொள்ளையர்களை பிடிக்க திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன் தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சோலையப்பன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்ட போலீசார் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். மேலும் பழைய குற்றவாளிகள் யாரேனும் கைவரிசை காட்டி இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சிலரை கண்காணித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர்.