ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது


ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 9 Jun 2018 11:15 PM GMT (Updated: 9 Jun 2018 6:57 PM GMT)

திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது.

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

அனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். அதன்பின்னர் அலுவலகத்திற்குள் உள்ள அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள மேஜை, பீரோக்கள், டிபன் பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதன்பிறகு அலுவலகத்திற்கு வந்திருந்த அனைவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். அவர்களை தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்தனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. சோதனையின் போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 850-ஐ பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். நேற்று மாலை வரை இந்த சோதனை நடந்தது.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், வட்டார போக்குவரத்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் மோகனன் உள்ளிட்ட 15 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story