கள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து


கள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 9 Jun 2018 9:45 PM GMT (Updated: 9 Jun 2018 7:07 PM GMT)

கள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் எதிரில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் பர்னிச்சர் மற்றும் ஜூஸ் கார்னர், பேக்கரி ஆகிய கடைகள் இயங்கி வருகிறது. பர்னிச்சர் கடையில் விலை உயர்ந்த மரக்கட்டில், பீரோ, குளிர்சாதனபெட்டி, வாசிங்மெஷின், மின்விசிறி, கிரைண்டர், மேஜை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் பர்னிச்சர் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.

பின்னர் சிறிது நேரத்தில் கடை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காற்று வீசியதால் பர்னிச்சர் கடையில் எரிந்த தீ, அருகில் இருந்த ஜூஸ் மற்றும் பேக்கரி ஆகிய கடைகளிலும் பரவியது. மளமளவென பரவிய தீ, வணிக வளாகத்தின் அருகில் இருந்த துணிக்கடையிலும் பற்றி எரிந்தது. இதனால் பஸ் நிலைய பகுதி முழுவதும் கரும்புகை மூட்டத்துடன் காணப்பட்டது.

இதனால் அந்த வணிக வளாகம் முன்பு ஏராளமானவர்கள் திரண்டனர். இதன்காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பர்னிச்சர் கடையின் அடித்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின.

மேலும் ஜூஸ், பேக்கரி கடை மற்றும் துணிக்கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் அதிகாலையில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story