2013–2018–ம் ஆண்டு வரை அம்மா திட்ட முகாம்: மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு
மதுரை மாவட்டத்தில் 2013–2018–ம் ஆண்டு அம்மா திட்ட முகாமில் 1 லட்சத்து 10 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளன.
மதுரை,
மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக முதியவர்கள், ஏழைகள், பெண்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்வதால் ஏற்படும் சிரமத்தினை தடுக்கும் வகையில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013–ம் ஆண்டு அம்மா திட்ட முகாம் தொடங்கப்பட்டது. இந்த முகாமில் முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காணப்படும்.
இதுதவிர கிராமத்தின் பொதுவான கோரிக்கைகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி அந்த துறையின் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2–ந் தேதி முதல் அம்மா திட்ட முகாம் 10 தாலுகாவிலும் நடத்தப்பட்டு வருகிறது. 2013–ம் ஆண்டு முதல் 2018–ம் ஆண்டு வரை மொத்தம் 1,782 கிராமங்களில் நடைபெற்ற அம்மா திட்ட முகாம் மூலம் இதுவரை 1 லட்சத்து 87 ஆயிரத்து 427 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியான 1 லட்சத்து 10 ஆயிரத்து 401 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.