பெண்ணாடத்தில் ரூ.84 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
பெண்ணாடத்தில் தரமின்றி அமைக்கப்படுவதாக கூறி ரூ.84 லட்சத்தில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் சுமைதாங்கியில் இருந்து அரியராவி, கீரனூர், பூவனூர், மாளிகைகோட்டம் வழியாக வெண்கரும்பூர் வரை 7½ கிலோ மீட்டர் வரை சாலை உள்ளது. இச்சாலையின் வழியாக சுமார் 10–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லு£ரிகள் செல்வதற்காகவும் பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாலை முழுவதும் கடுமையாக சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து அந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.84 லட்சத்தை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி மூலம் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் நேற்று சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள், அகலம் குறைவாகவும், தரமின்றியும் சாலை அமைக்கப்படுவதாக கூறினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி செயற்பொறியாளர் குமரேசன் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாலையை தரமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தரமானதாக சாலை அமைக்க வேண்டும் என்று அங்கிருந்த ஊழியர்களை எச்சரித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.