வேளச்சேரியில் தொழில் அதிபர் வீட்டில் 200 பவுன் நகை- ரூ.7 லட்சம் கொள்ளை


வேளச்சேரியில் தொழில் அதிபர் வீட்டில் 200 பவுன் நகை- ரூ.7 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 9:20 PM GMT)

வேளச்சேரியில் கட்டுமான தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 200 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி சீத்தாபதி நகர் ஜெயந்தி தெருவைச் சேர்ந்தவர் இளங்கேஸ்வரன்(வயது 47). இவருடைய தம்பி மகேஸ்வரன். தொழில் அதிபர்களான இவர்கள் இருவரும் கட்டுமான தொழில், தண்ணீர் வினியோகம் மற்றும் பல்பொருள் விற்பனையகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அண்ணன்-தம்பி இருவரும் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், தங்களது சொந்த ஊரான சிவகங்கையில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்துகொள்ள சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை இளங்கேஸ்வரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டினர், இதுபற்றி வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், இளங்கேஸ்வரன் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 200 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுபற்றி சிவகங்கை சென்று உள்ள இளங்கேஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் சென்னை திரும்பி வந்து கொண்டு இருக்கிறார். அவர் இங்கு வந்த பிறகுதான் உண்மையில் அவரது வீட்டில் எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்ற முழுவிவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story