அதிருப்தியில் இருப்பது உண்மை காங்கிரசில் இருந்து விலகுவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு சதீஸ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி


அதிருப்தியில் இருப்பது உண்மை காங்கிரசில் இருந்து விலகுவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு சதீஸ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 9 Jun 2018 9:45 PM GMT (Updated: 9 Jun 2018 9:36 PM GMT)

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பது உண்மை தான் என்றும், காங்கிரசில் இருந்து விலகுவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாகவும் சதீஸ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

பெங்களூரு, 

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பது உண்மை தான் என்றும், காங்கிரசில் இருந்து விலகுவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாகவும் சதீஸ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

மந்திரி பதவி கிடைக்கவில்லை

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் கடந்த 6–ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. இதற்கிடையே பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த சதீஸ் ஜார்கிகோளி, தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. மாறாக அவரது சகோதரரான ரமேஷ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது.

என்றாலும் மந்திரி பதவி கிடைக்காததால் சதீஸ் ஜார்கிகோளி அதிருப்தியில் இருந்து வருகிறார். மேலும் அவர் மந்திரி பதவியை கைப்பற்ற எம்.பி.பட்டீலுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சதீஸ் ஜார்கிகோளி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரசில் இருந்து விலக முடிவு

“கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பெலகாவி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக என்னால் முடிந்த அளவுக்கு உழைத்தேன். ஆனால் எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் கட்சி மேலிட தலைவர்கள் மீது அதிருப்தியில் இருப்பது உண்மை தான். மந்திரி பதவி கிடைக்காமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனக்கு எதற்காக மந்திரி பதவி வழங்கவில்லை என்பது பற்றி தெரியவில்லை. இதுதொடர்பாக கட்சி மேலிட தலைவர்கள் யாரும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசவில்லை.

நானும் யாருடனும் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எம்.பி.பட்டீலும் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளார். அதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி, அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவும், உறுப்பினர் பதவிக்கு ராஜினாமா கொடுக்கவும் முடிவு செய்துள்ளேன். அதுகுறித்து இன்னும் ஓரிரு நாட்களில் என்னுடைய இறுதி முடிவை அறிவிப்பேன்.’’

இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.


Next Story