ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது நெல்லை போலீஸ் கமிஷனர் உத்தரவு
ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார்.
நெல்லை,
ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார்.
ராக்கெட் ராஜாநெல்லை பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் வெடிகுண்டுகளை வீசியும், ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநெல்வேலி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த நாடார் மக்கள் சக்தி தலைவர் ராஜா என்ற ராக்கெட் ராஜா (வயது 47) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்தற்போது ராக்கெட் ராஜா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்–ஒழுங்கு) சுகுணா சிங், பாளையங்கோட்டை உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து ராக்கெட் ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை திருநெல்வேலி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய போலீசார் நேற்று கோவையில் உள்ள மத்திய சிறை அதிகாரிகள் மற்றும் ராக்கெட் ராஜா ஆகியோரிடம் வழங்கினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 7 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.