அம்பையில் துணிகரம் கடையின் சுவரில் துளையிட்டு பணம் கொள்ளை முகமூடி அணிந்த மர்மநபர்கள் கைவரிசை


அம்பையில் துணிகரம் கடையின் சுவரில் துளையிட்டு பணம் கொள்ளை முகமூடி அணிந்த மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 11 Jun 2018 2:45 AM IST (Updated: 11 Jun 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு ரூ.50 ஆயிரத்தை முகமூடி அணிந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அம்பை, 

அம்பையில் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு ரூ.50 ஆயிரத்தை முகமூடி அணிந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

வாகன உதிரிபாகங்கள் கடை

அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் அம்பை மெயின்ரோட்டில் வாகன உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

பின்னர் நேற்று காலை சரவணன் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையின் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. மேஜையில் இருந்த பணம் மற்றும் செல்போன் திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் இதுகுறித்து அம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ரூ.50 ஆயிரம் கொள்ளை

மேலும் அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர்கள் கடையின் சுவரில் துளையிட்டு, அதன் வழியாக உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை சிதறி போட்டு விட்டு, மேஜையில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வந்து உள்ளனர். இதனால் கொள்ளையர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடையின் சுவரை துளையிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அம்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story