மருத்துவ காப்பீடு திட்டத்தில் 20 ஆயிரத்து 152 பேர் பயனடைந்துள்ளனர் கலெக்டர் விஜயலட்சுமி தகவல்


மருத்துவ காப்பீடு திட்டத்தில் 20 ஆயிரத்து 152 பேர் பயனடைந்துள்ளனர் கலெக்டர் விஜயலட்சுமி தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2018 10:30 PM GMT (Updated: 10 Jun 2018 8:03 PM GMT)

மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 152 பேர் பயனடைந்துள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.

அரியலூர்,

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், ஏழை குடும்பங்களின் மருத்துவ பாதுகாப்பை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இது கட்டணமில்லா காப்பீடு திட்டமாகும். இந்த காப்பீடுத் திட்டம் மூலம் 1,027 நோய்களுக்கு சிகிச்சைகள், 154 தொடர் நோய்களுக்கு சிகிச்சைகள், 38 நோய்களை கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் 154 நோய்களுக்கு ரூ.1½ லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை 1 லட்சத்து 81 ஆயிரத்து 272 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 20 ஆயிரத்து 152 பயனாளிகளுக்கு ரூ.37 கோடியே 76 லட்சத்து 42 ஆயிரத்து 196 செலவிடப்பட்டுள்ளது.

அட்டை பெறலாம்

மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் பயனடைய விரும்புவோரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்றும், குடும்ப அட்டை, ஆதார் அட்டையுடன், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் பிரிவில் பதிவு செய்து, மருத்துவ காப்பீடு அட்டை பெற்று பயன் பெறலாம்.

மேலும், கூடுதல் விவரங்கள் பெற www.cm-c-h-istn.com என்ற இணையதள முகவரியிலும், கட்டணமில்லா தொலைபேசி 1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு இத்திட்ட செயல்முறைகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story