ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2018 10:30 PM GMT (Updated: 10 Jun 2018 8:11 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 52 பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகள் மற்றும் 6 கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள் என 58 தங்கி பயிலும் விடுதிகள் இயங்கி வருகின்றன. தற்போது 2018-19-ம் கல்வியாண்டிற்கான 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

விடுதியில் சேர மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களின் சொந்த ஊருக்கும், விடுதிக்கும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் வருகிற 20-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

கல்லூரி விடுதிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவிகள் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதிக்குள் அந்தந்த விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். காலக்கெடுவுக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story