ஏர்போர்ட் பகுதியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


ஏர்போர்ட் பகுதியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Jun 2018 4:15 AM IST (Updated: 11 Jun 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு திருச்சி ஏர்போர்ட் குலாப்பட்டி பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

செம்பட்டு,

திருச்சி ஏர்போர்ட் குலாப்பட்டி பகுதியில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 15 நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையாம்.

இதனை கண்டித்தும், குடிநீர் வழங்கக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரமாக சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் செல்போன் மூலம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தனியார் லாரி மூலம் உடனடியாக குடிநீர் வழங்குவதாக மாநகராட்சி இளநிலை பொறியாளர் ரவீந்திரன் தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நிருபர்களிடம் கூறுகையில், இப்பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி விடுகின்றனர். இதனால்தான் பலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இப்பகுதியில் நீண்ட நாட்களாக புதிய சாலை அமைத்து கொடுக்கவும், சீராக குடிநீர் வழங்கவும் பலமுறை கோரிக்கை வைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி இளநிலை பொறியாளர் ரவீந்திரனிடம் கேட்டபோது, பொதுமக்கள் தெரிவிப்பது தவறான குற்றச்சாட்டு. கடந்த சில நாட்களாக மட்டுமே ஒரு சில தெருக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. அதுவும் நாளை (இன்று) சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு விடும் என்று தெரிவித்தார். 

Next Story