கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வேலை கேட்டு வந்த மாற்றுத்திறனாளி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வேலை கேட்டு வந்த மாற்றுத்திறனாளி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மனுக்களை பதிவு செய்து விட்டு, கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து, கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக காத்திருந்தனர். அப்போது சிதம்பரம் காமாட்சி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜ்குமார் (வயது 35), பி.எட். படித்துள்ள தன்னுடைய மனைவி சரிதாவுடன் மனு கொடுப்பதற்காக காத்திருந்தார்.
10-ம் வகுப்பு படித்துள்ள தனக்கும், பி.எட். படித்துள்ள மனைவிக்கும் வேலை கேட்டு மனுவுடன் நீண்ட நேரமாக காத்திருந்தார். பகல் 12 மணி அளவில் திடீரென ராஜ்குமார் மயங்கி விழுந்தார். உடன் அவரை மனைவி சரிதா மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் மாற்றுத்திறனாளி திடீரென மயங்கி விழுந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story