மாவட்ட செய்திகள்

மதகை சீரமைக்க கோரி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திடீர் சாலை மறியல் + "||" + The DMK-Congress coalition parties are demanding a revamp of the church

மதகை சீரமைக்க கோரி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திடீர் சாலை மறியல்

மதகை சீரமைக்க கோரி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திடீர் சாலை மறியல்
கொட்டாரம் அருகே குளத்தில் மதகை சீரமைக்க கோரி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரம், அச்சன்குளத்தில் சாலையோரம் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. குளத்தின் மதகு பழுதடைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலையில் மண் அரிப்பு ஏற்படுவதுடன், குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் வயல்வெளியில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, பழுதடைந்த மதகையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில், சேதமடைந்த மதகை சீரமைக்க வலியுறுத்தி நேற்று காலை 10 மணியளவில் அச்சன்குளம் சந்திப்பில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி தலைமை தாங்கினார். தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜஜெகன் முன்னிலை வகித்தார்.

வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மதியழகன், மாநில வர்த்தக காங்கிரஸ் துணை தலைவர் செல்லத்துரை, கன்னியாகுமரி தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சீனிவாசன், நகர காங்கிரஸ் தலைவர் அரிகிருஷ்ண பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் யோபு, வைகுண்ட பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிரில், மற்றும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குளத்தில் கசிவு ஏற்பட்ட பகுதியில் தற்காலிகமாக மணல் மூடைகள் அடுக்கி கசிவை நிறுத்தவும், விரைவில் அங்கு பாலம் கட்டவும் ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.