கோவை காந்திபார்க் புதியதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
கோவை காந்திபார்க்கில் புதியதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கோவை,
கோவை காந்திபார்க் பொன்னையாராஜபுரம் பகுதியில் குளோபஸ் நட்சத்ரா என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பு 18 மாடிகளை கொண்டது. இந்த கட்டிடம் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதற்காக கட்டுமான பொருட்கள், அலங்கார பொருட்கள் கொண்டுவரப்பட்டு கட்டிடத்தின் கீழ் தளத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
இதுதவிர கட்டிடத்திற்கு வர்ணம் தீட்டுவதற்காக விலை உயர்ந்த பெயிண்ட் மற்றும் பழைய கட்டுமான பொருட்கள், அட்டைபெட்டிகள் அங்கே வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. உடனே அங்கு இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்தனர். அங்கு இருந்த பொருட்கள் தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பகுதியில் மின்சார வினியோகத்தை துண்டித்தனர்.
தீ விபத்து குறித்த தகவலின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் (தவமணி) தலைமையில் நிலைய அலுவலர்கள் ராமச்சந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் தீ அணைக்கும் பணி நடைபெற்றது. முதலில் தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த 2 வண்டிகள் மூலம் தீ அணைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அதனை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனம் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.