மாவட்ட செய்திகள்

கூடலூர் பகுதியில் தொடர் மழை: குனில் தடுப்பணை நிரம்பி வழிகிறது + "||" + Rainfall in gudaloor area

கூடலூர் பகுதியில் தொடர் மழை: குனில் தடுப்பணை நிரம்பி வழிகிறது

கூடலூர் பகுதியில் தொடர் மழை: குனில் தடுப்பணை நிரம்பி வழிகிறது
கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் குனில் தடுப்பணை நிரம்பி வழிகிறது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. தேவாலாவில் 75 மி.மீட்டரும், கூடலூரில் 71 மி.மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. இதனால் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் உள்ள டி.ஆர்.பஜாரில் இரவு 9 மணிக்கு மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து கொட்டும் மழையை பொருட்படுத்தாது மரத்தை மின்வாள்கள் கொண்டு அறுத்து அகற்றினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மரம் அகற்றப்பட்டது.

இதனிடையே கூடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று மண் சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. மேலும் கூடலூர் மெயின் ரோட்டில் சாலையின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண் சரிவுகள் அதிகரிக்கும் சூழல் காணப்படுகிறது. இதனை தடுக்க வருவாய், தீயணைப்பு, நகராட்சி உள்பட அனைத்து துறை அலுவலர்களும், ஊழியர்களும் தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகும் அபாயமும் உள்ளது.

இதனால் நீர்நிலைகளின் கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் உஷார்படுத்தி உள்ளனர். இதேபோல் குனில், வேடன்வயல் உள்பட பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. கூடலூர் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.