கூடலூரில் 4–வது நாளாக பலத்த மழை: மண் சரிவு; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
கூடலூர் பகுதியில் தொடர்ந்து 4–வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் தொடர்ந்து நேற்று 4–வது நாளாக பலத்த மழை பெய்தது. கூடலூரில் 87 மி.மீட்டரும், தேவாலாவில் 92 மி.மீட்டரும் மழை அளவு பதிவாகியது. தொடர்ந்து மழை தீவிரமாக பெய்து வருவதால் கூடலூர் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதேபோல் பாண்டியாறு, மாயார், பொன்னானி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூடலூர் புஷ்பகிரி, ஊட்டி சாலை உள்பட பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து, மின் கம்பிகள் அறுந்து கிடக்கின்றன. கூடலூர்–ஊட்டி, கோழிக்கோடு முக்கிய சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்தன. இது பற்றி அறிந்த உடன் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அந்த மரங்களை அகற்றினர்.
நள்ளிரவு பெய்த மழையில் கோழிக்கோடு சாலையில் செம்பாலா என்ற இடத்தில் மூங்கில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள்கொட்டும் மழையில் விரைந்து சென்று மூங்கில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிகமான மூங்கில்கள் விழுந்து கிடந்ததால் அவற்றை அறுத்து எடுத்து அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று காலை அதிகாலை வரை இந்த பணிகள் நடைபெற்றன. தொடர் மழையால் கூடலூர் பகுதியில் உள்ள பாண்டியாறு, மாயாறு உள்பட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கூடலூரில் 1–ம் மைல் பகுதி ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோ–கோ காடு குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் அமீது, நபீஷா, கதிஜா, முகமது அலி ஆகியோர் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த பகுதி வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி அருகில் உள்ள வாழைத்தோப்பில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன. இதுபோன்று கூடலூர் அருகே ஆனை செத்தகொல்லி பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது. உடனே அப்பகுதி மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியில் மாயாவதி உள்பட சிலரது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் உள்ள பீரோ, கட்டில், வாஷிங் மெஷின் வெள்ளத்தில் மிதந்தன. இதுபோல் கூடலூர் 2–ம் மைல் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தட்டக்கொல்லி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, பாலசுப்பிரமணி என்கிற ராஜா, இப்ராகிம் ஆகியோரது வீடுகள் சேதம் அடைந்தன. நாடுகாணி அருகே பொன்னூர், ஆமைக்குளம் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால்அந்த பகுதியில் உள்ள வீடுகள் இடியும் நிலையில் உள்ளன. கூடலூர் துப்புகுட்டி பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறைகள் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்தன. கூடலூர்–சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் பாடந்தொரை பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடக்கின்றன. இதனால் கூடலூர் பகுதியில் மின் தடை ஏற்பட்டு, நகரம் இருளில் மூழ்கி உள்ளது. இதனால் கூடலூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து உள்ளது.