சேரம்பாடி அருகே மயங்கி விழுந்த காட்டு யானைக்கு சிகிச்சை


சேரம்பாடி அருகே மயங்கி விழுந்த காட்டு யானைக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 13 Jun 2018 3:45 AM IST (Updated: 13 Jun 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

சேரம்பாடி அருகே மயங்கி விழுந்த காட்டுயானைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதன் நாக்கு, வாய் பகுதியில் காயங்கள் ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே செரியோடு பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு தனியார் தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்கள் கொட்டும் மழையில் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தனியார் தொழிற்சாலைக்கு செல்லும் சாலையில் ஒரு காட்டு யானை மிகவும் சோர்வாக நின்றிருந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இந்த நேரத்தில் திடீரென அந்த காட்டு யானை மயங்கி கீழே விழுந்தது.

இதை கண்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து சேரம்பாடி வனச்சரகர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டு யானையின் வாயில் பலத்த காயங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அங்கு வந்த கால்நடை டாக்டர் பிரபு காட்டு யானையின் உடல் நிலையை பரிசோதித்தார்.

கொட்டும் மழையில் காட்டு யானை கிடப்பதை கண்ட வனத்துறையினர் அதன் மீது மேற்கூரை அமைத்து பாதுகாத்தனர். பின்னர் கேரள மாநிலம் முத்தங்கா சரணாலய கால்நடை டாக்டர் அருண் சத்தியன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

அந்த காட்டு யானையின் நாக்கு மற்றும் வாயில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. ஆகவே அந்த காயங்கள் எப்படி ஏற்பட்டது என மருத்துவ குழு ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் முகாமிட்டு காட்டு யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 3–ந் தேதி படச்சேரி பகுதியில் சுமார் 35 வயது பெண் காட்டு யானையும் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story