மீனவர்கள் எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டி செல்லக்கூடாது தமிழ்நாடு–புதுச்சேரி கடற்படை தலைமை அதிகாரி எச்சரிக்கை


மீனவர்கள் எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டி செல்லக்கூடாது தமிழ்நாடு–புதுச்சேரி கடற்படை தலைமை அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2018 10:15 PM GMT (Updated: 12 Jun 2018 7:15 PM GMT)

மீனவர்கள் எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டி செல்லக்கூடாது என தமிழ்நாடு–புதுச்சேரி கடற்படை தலைமை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமேசுவரம்,

தமிழகத்தில் விசைப்படகுகளில் சென்று மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அனைத்து படகுகளும் பழுதுபார்க்கப்பட்டு கடலுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு–புதுச்சேரி கடற்படை தலைமை அதிகாரி அலோக் பட்நாகர் நேற்று ராமேசுவரம் வருகை தந்து ஆய்வு பணியில் ஈடுபட்டார். பின்னர் அவர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மீன்துறை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தலைமை அதிகாரி அலோக் பட்நாகர் கூறுகையில், “தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எக்காரணத்தை கொண்டும் இந்திய கடல் எல்லையை தாண்டிச்செல்லக்கூடாது. மீனவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமேயானால் செல்போன் மூலம் 1554 என்ற எண்ணிலோ, வாக்கி டாக்கியில் 16 என்ற எண்ணிலோ கடற்படைக்கு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக கடற்படை கப்பல்கள் அங்கு வந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும். மீன்பிடிக்கும் போது சம்பந்தமில்லாத, சந்தேகப்படும்படியான படகுகள் சென்றால் உடனடியாக கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மீனவர்கள் அனைவரும் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.” என்றார்.

இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்களை தாக்குவதும், மீன்பிடி படகுகளை பிடித்து செல்வதுமாக உள்ளனர் என்று மீனவர்கள் சார்பில் புகார் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அவர் “இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் நுழைவதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் இனிமேல் இந்த வி‌ஷயத்தில் இந்திய கடற்படை சார்பில் முழு கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.


Next Story