மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 2,468 பேருக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு


மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 2,468 பேருக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு
x
தினத்தந்தி 13 Jun 2018 4:15 AM IST (Updated: 13 Jun 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 2,468 பேருக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவை பதிவு தபால் மூலம் கலெக்டர் சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார்.

விழுப்புரம்

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு வீடுகள் இல்லாமல் கிராமப்புறங்களில் வாழும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 19 ஆயிரத்து 69 வீடுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 5 ஆயிரத்து 158 பேருக்கு வீடு கட்டிக்கொள்வதற்கான உத்தரவு, பதிவு தபால் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது 2,468 பேருக்கு வீடு கட்டிக்கொள்வதற்கான உத்தரவு, பதிவு தபால் மூலம் அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு, 2,468 பேருக்கும் வீடு கட்டிக்கொள்வதற்கான உத்தரவை தபால் ஊழியர்களை வரவழைத்து அவர்கள் மூலமாக பதிவு தபாலில் அனுப்பி வைத்தார்.

அப்போது கலெக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், இந்த திட்டத்தில் பயனாளிகள் 2011-ம் ஆண்டு சமூக பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு கான்கிரீட் வீடு 269 சதுர அடியில் கட்டுவதற்கு பயனாளிக்கு ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 160 வழங்கப்பட உள்ளது. இதில் அரசு வழங்கும் மானியத்தொகையாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 90 பேருக்கு கூலித்தொகையாக ரூ.20 ஆயிரத்து 160-ம், கழிப்பறை கட்ட தனியாக ரூ.12 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 160 வழங்கப்படும். வீடுகளுக்கான பட்டியல் தொகை 4 தவணையாக வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் பயனாளியின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட மானிய விலையில் சிமெண்டு மூட்டைகள், இரும்பு கம்பிகள், கதவு மற்றும் ஜன்னல்கள் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த கட்டுமான பொருட்களுக்கான கிரையத்தொகை பயனாளிகளுக்கு பட்டியல் தொகை வழங்கும்போது பிடித்தம் செய்யப்படும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என்றார்.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) காயத்ரி சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை மேலாண்மை அலுவலர் மணிவாசகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story