மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி + "||" + Child Labor Against Awareness Rally in Villupuram

விழுப்புரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
விழுப்புரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியர் ஆகியோர் கலந்துகொண்டு, 14 வயது முடிவடையாத குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது, குழந்தை உரிமைகள் காக்கப்பட வேண்டும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும், கல்வி கற்பது குழந்தைகளின் உரிமை என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) காயத்ரி சுப்பிரமணியன், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் உஷா, வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கலெக்டர் சுப்பிரமணியன், குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.