கோவில்களில் தொடரும் உண்டியல் திருட்டு குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
புதுவையில் உள்ள கோவில்களில் தொடர்ந்து உண்டியல் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுவையில் சமீப காலங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆள் இல்லாத வீடுகளை குறி வைத்து பூட்டை உடைத்து திருடுவது சர்வ சாதரணமாக நடந்து வருகிறது.
இந்த திருட்டுகளில் கைதேர்ந்தவர்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் உள்ள வீடுகளில் திருடும்போது காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கை கையோடு எடுத்துச் சென்றுவிடுகின்றனர். மேலும் பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களிலும் தங்கள் உருவம் பதிவாகாமல் இருக்கும் வகையில் திட்டமிட்டு திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற திருடர்களால் புதுவை போலீசாருக்கு பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் குறித்து சிறு தகவல்கூட கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது தொடர்ச்சியாக கோவில்களை குறிவைத்து உண்டியல்கள் உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், தேங்காய்த்திட்டு என கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பாப்பாஞ்சாவடி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 10–க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாதது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.