சேலம் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் 8 வழிச்சாலை அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் புறக்கணிப்பு


சேலம் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் 8 வழிச்சாலை அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2018 11:11 PM GMT (Updated: 12 Jun 2018 11:11 PM GMT)

சேலம் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் 8 வழிச்சாலை அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் நிர்ணயித்த தொகை போதாது என்று விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

சேலம்,

சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்திற்கு விவசாயிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 8 வழிச்சாலை அமைப்பதற்கான கருத்துகேட்பு கூட்டம் நேற்று மாலை சேலம் மணியனூரில் உள்ள தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.

இதற்கு நில எடுப்பு தாசில்தார் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். தனி தாசில்தார் பத்மபிரியா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பூலாவரி அக்ரகாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறி அவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது, ‘8 வழிச்சாலைக்கு விவசாய நிலங்கள் எடுக்கப்பட உள்ளது. அவ்வாறு நிலம் எடுத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிப்படையும். இந்த திட்டம் அமைக்க எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே இந்த திட்டதை கைவிட வேண்டும். மேலும் 8 வழிச்சாலைக்கு எடுக்கப்பட உள்ள நிலம் மார்க்கெட் விலையாக ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை விற்கப்படுகிறது. ஆனால் அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.8 லட்சம் தான் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே இந்த விலையும் போதாது. மேலும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து உள்ளோம்’ என்று கூறினர்.

தொடர்ந்து அவர்கள் இந்த கோரிக்கையை மனுவாக எழுதி தாசில்தார் சுந்தரராஜனிடம் வழங்கினர்.

Next Story