பள்ளத்தில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி


பள்ளத்தில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 12 Jun 2018 11:18 PM GMT (Updated: 12 Jun 2018 11:18 PM GMT)

மெட்ரோ ரெயில் வழித்தட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து 3 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாள்.

மும்பை,

மும்பை கோரேகாவ் கிழக்கு ஒபேரா வணிக வளாகம் எதிரில் உள்ள பாலத்தின் கீழ் வசித்து வருபவர் கரண். இவருக்கு 3 வயதில் சீத்தல் மிஸ்ரா என்ற மகள் இருந்தாள். நேற்றுமுன்தினம் மாலை சிறுமி சாக்லெட் வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றாள். அதன் பின்னர் அவள் வீடு திரும்பவில்லை.

இதனால் கலக்கம் அடைந்த கரணும், அவரது மனைவியும் கடையில் சென்று தேடினர். ஆனால் அவள் அங்கு இல்லை.

இந்தநிலையில், அங்கு அந்தேரி- தகிசர் மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டு உள்ள பள்ளத்தில் தேங்கியுள்ள மழைநீரில் சிறுமி மூழ்கி கிடந்தாள். அவள் தவறி விழுந்து கிடந்தது தெரியவந்தது.

இதைப்பார்த்து பதறிப்போன இருவரும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வன்ராய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, போலீஸ் விசாரணைக்கு பின் மெட்ரோ வழித்தட பணியை செய்யும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. தெரிவித்து உள்ளது. 

Next Story