நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம்: நெல்லை மாவட்டத்துக்கு 27–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஷில்பா அறிவிப்பு

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 27–ந் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
நெல்லை,
நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 27–ந் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார்.
ஆனித்திருவிழாநெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இதில் ஆனித்திருவிழா தேரோட்டம் மிக சிறப்பு வாய்ந்தது. சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் வெளியூரை சேர்ந்த பக்தர்களும் தேரோட்டத்தை பார்ப்பதற்காக நெல்லைக்கு வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா வருகிற 19–ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. 27–ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவுக்கான பணிகள் தொடங்குவதற்காக கடந்த 1–ந் தேதி நெல்லையப்பர் கோவில் 2–வது பிரகாரத்தில் விநாயகர் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.
நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் உள்ளன. தேரோட்டத்துக்காக அந்த 5 தேர்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஆனித்தேரோட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
உள்ளூர் விடுமுறைநெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 27–ந் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக அடுத்த மாதம் (ஜூலை) 14–ந் தேதி அன்று அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் விடுமுறை ஆகாது. உள்ளூர் விடுமுறையன்று நெல்லை மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், அரசு காப்புகள் ஆகியவற்றில் அவசர பணிகளை கவனிப்பதற்காக குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இந்த அலுவலகங்கள் செயல்படும்.
கல்வி நிறுவனங்களை பொறுத்த வரையில் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவைகளில் நடைபெறும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் அறிவித்துள்ளார்.