தூத்துக்குடி பக்கிள் ஓடை கடலில் கலக்கும் இடத்தில் ரூ.33 கோடி செலவில் நுண்சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை


தூத்துக்குடி பக்கிள் ஓடை கடலில் கலக்கும் இடத்தில் ரூ.33 கோடி செலவில் நுண்சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2018 9:00 PM GMT (Updated: 13 Jun 2018 1:11 PM GMT)

தூத்துக்குடி பக்கிள் ஓடை கடலில் கலக்கும் இடத்தில் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.33 கோடி செலவில் 2 நுண் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி பக்கிள் ஓடை கடலில் கலக்கும் இடத்தில் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.33 கோடி செலவில் 2 நுண் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ரூ.33 கோடி

தூத்துக்குடி மாநகராட்சியின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை அமைந்து உள்ளது. இந்த ஓடையால் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில், உயர் தொழில் நுட்பத்துடன் பசுமை பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ், இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பக்கிள் ஓடையை ஒட்டி இருபுறமும் மின்விளக்குகள், நடைபாதை, ஓடுதளம், மரங்கள், வண்ண பூஞ்செடிகள் மற்றும் ஆங்காங்கே இருக்கை வசதிகளுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பக்கிள் ஓடையில் செல்லும் கழிவுநீரை சுத்தம் செய்து கடலில் கலக்கும் வகையில், பக்கிள் ஓடையின் கடைசி பகுதியான திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரத்தில் 2 நுண் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.33 கோடி மதிப்பில் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

சுத்திகரிப்பு நிலையம்

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்பட உள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளின் பிரதான பணியான 28 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.36 கோடியே 89 லட்சம் செலவில் மாநகராட்சிக்கு சொந்தமான தருவைக்குளம் உரக்கிடங்கில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சியின் கழிவுநீர் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் நவீன தொழில்நுட்ப முறையில் சுத்திகரிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.


Next Story