குற்றாலத்தில் தடை செய்யப்பட்ட அரிவாள் விற்பனை கனஜோர்; சுற்றுலா பயணிகள் அச்சம் போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


குற்றாலத்தில் தடை செய்யப்பட்ட அரிவாள் விற்பனை கனஜோர்; சுற்றுலா பயணிகள் அச்சம் போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2018 8:30 PM GMT (Updated: 13 Jun 2018 2:35 PM GMT)

குற்றாலத்தில் தடை செய்யப்பட்ட அரிவாள் விற்பனையை கனஜோராக நடந்து வருகிறது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி,

குற்றாலத்தில் தடை செய்யப்பட்ட அரிவாள் விற்பனையை கனஜோராக நடந்து வருகிறது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றால சீசன்

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் குற்றாலத்திற்கு வந்து சீசனை அனுபவித்து செல்கின்றனர். சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பழ வகைகள், உணவு வகைகள், பேன்ஸி பொருட்கள் போன்றவற்றை வியாபாரிகள் நடைபாதைகளில் விற்பனை செய்கிறார்கள்.

வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் இரு சக்கர வாகனங்களில் இந்த விற்பனை நடைபெறுகிறது. குற்றாலம் மெயின் அருவிக்கரையில் சிலர் இரு சக்கர வாகனங்களில் அரிவாள்கள், கத்திகள் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலத்தில் 3 அரிவாள்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வந்தன.

அந்த நேரத்தில் சில கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது, பலர் குற்றாலம் கடைகளில் அரிவாள்கள் வாங்கியதாக கூறினார்கள். இதனால், கடந்த 1993–ம் ஆண்டு குற்றாலத்தில் அரிவாள்கள் கடையை அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு அவை அகற்றப்பட்டன.

அரிவாள் விற்பனை

தற்போது குற்றாலத்தில் தடை செய்யப்பட்ட அரிவாள் விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சென்னையை சேர்ந்த ஜெய்சங்கர் கூறுகையில்,‘ குற்றாலத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அரிவாள்கள் விற்பனை செய்கிறார்கள். ஏற்கெனவே குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் மது அருந்தி வருகிறார்கள். இவர்களால் ஏற்கனவே தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் மது போதையில் வருபவர்களுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் இந்த ஆயுதங்களால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, போலீசார் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Next Story