ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி காவல்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி அருகே ரூ.137 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை காவல் துறை கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கும்மிடிப்பூண்டி,
தமிழகத்துடன் வடமாநிலங்களையும், ஆந்திராவையும் இணைக்கும் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடத்தல், எடை மற்றும் வரி ஏய்ப்பு போன்றவற்றை கண்டறியும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே தமிழக அரசின் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனைச்சாவடியின் மொத்த மதிப்பு ரூ.137 கோடியே 18 லட்சம் ஆகும். இது போக்குவரத்து துறை, மதுவிலக்கு, கால்நடை துறை, காவல் துறை, வனத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 6 துறைகளை ஒருங்கிணைத்த சோதனைச்சாவடி ஆகும்.
இந்தியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்த இந்த சோதனைச்சாவடி, தமிழக–ஆந்திர மாநிலங்களுக்கான எல்லையில் அமைந்துள்ளது. இதற்கான முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழக முதல்–அமைச்சரால் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்த சோதனைச்சாவடியில் ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களுக்காக 10 வழித்தடங்களும், தமிழகத்தில் இருந்து ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்காக 6 வழித்தடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
கடத்தல் பொருட்களை மிக நுட்பமாக கண்டறியும் வகையில் ஒவ்வொரு வழித்தடத்திலும் ஸ்கேனிங் வசதியும், சரக்கு வாகனங்களுக்கான எடை மேடையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மேற்கண்ட சோதனைச்சாவடியில் மது விலக்கு அமலாக்கப்பிரிவுக்கான கட்டிட அமைப்பு, அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போன்றவற்றை மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அவருடன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டுகள் அமனா மான், ஷியமளா தேவி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராசன், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத், வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் பிரசன்னா ஆகியோர் உடன் வந்தனர்.
அப்போது மேற்கண்ட சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து அத்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.