ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருப்பூரில் ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி, மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் 3 செட்டிபாளையத்தை அடுத்த அன்னையம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 40). இவருடைய மகள் காவியாஸ்ரீ (16). அங்கேரிபாளையம் வெங்கமேட்டில் உள்ள வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற காவியாஸ்ரீ வீட்டு குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி மற்றும் அனுப்பர்பாளையம் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நேற்று முன்தினம் வகுப்பில் நடந்த ஆங்கில தேர்வின்போது மாணவி காவியா ஸ்ரீ புத்தகத்தை பார்த்து காப்பி அடித்து எழுதியதாகவும், இதை பார்த்த ஆசிரியை, மாணவியை அழைத்து கண்டித்து அறிவுரை கூறியதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஆசிரியை திட்டியதால்தான் காவியா ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக கூறி மாணவி உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள், அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவியின் உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவம் காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளி முன்பும் மற்றும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.