திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிக்கு தேவையான ராணுவ நிலம் ஒரு மாதத்தில் கிடைக்கும்


திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிக்கு தேவையான ராணுவ நிலம் ஒரு மாதத்தில் கிடைக்கும்
x
தினத்தந்தி 14 Jun 2018 4:15 AM IST (Updated: 14 Jun 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிக்கு தேவையான ராணுவ நிலம் ஒரு மாதத்தில் கிடைக்க உள்ளது. மதுரை சாலை பகுதியை அடுத்த மாதம் போக்கு வரத்துக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தின் முதல் கட்ட பணியில் சென்னை சாலை பகுதியில் பாலம் அமைக்க ராணுவத்திற்கு சொந்தமான 66 சென்ட் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டால் தான் அந்த பகுதியில் பாலம் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய முடியும்.

ராணுவ நிலத்தை தருவதற்கு கொள்கை அளவில் பாதுகாப்பு துறை நிர்வாக ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த இடம் மட்டும் இன்றி திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான சுமார் 325 ஏக்கர் நிலத்திற்கு பதிலாகவும் தமிழக அரசின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு இடம் வழங்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செய லாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் டெல்லியில் உள்ள பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ராணுவ இடம் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ இடம் ஒப்படைக்கப்பட்டால் அதில் இருந்து 3 மாத காலத்திற்குள் ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தின் முதல் கட்ட பணிகள் ஒட்டுமொத்தமாக முடிவடைந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்படும்.

அதற்கு முன்பாக முதல் கட்ட தொகுப்பில் பணிகள் முடிவடைந்து உள்ள மதுரை சாலை பகுதியை போக்குவரத்துக்கு திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) இந்த சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்படும். இதன் மூலம் ஜங்ஷன் பகுதி, மத்திய பஸ் நிலைய பகுதி, திண்டுக்கல் சாலை பகுதிகளில் வாகனங்களை இயக்க முடியும்.

திருச்சியில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரை வட்ட சுற்றுச்சாலை பணியை விரைவாக தொடங்குவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பஞ்சப்பூர் முதல் கரூர் சாலை வரையிலான பணியை பொறுத்தவரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. ஏரிகள், குளங்கள் பாதிக்கப் படாத வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட திட்டத்திற்கு தமிழக அரசின் பொதுப் பணித்துறை ஓரிரு நாளில் தடையின்மை சான்று வழங்கி விடும்.

அதன் பின்னர் அந்த புதிய திட்டம் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பரிசீலனைக்கு பின்னர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பப்படும். அவர்கள் 3 மாத காலத்திற்குள் அனுமதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்னும் 4 மாத காலத்திற்கு பின்னர் அரை வட்ட சுற்றுச்சாலையின் பஞ்சப்பூர்- கரூர் சாலை பணிகள் தொடங்கும் என்பதில் ஐயமில்லை.

துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான அரை வட்ட சுற்றுச்சாலையை பொறுத்தவரை சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. மீதம் உள்ள பணிகளை முடிப்பதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும், ஒப்பந்ததாரருக்கும் இடையே நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதுபற்றி கோவாவில் நடைபெற்ற கூட்டத்தில் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விவாதித்து இருக்கிறார்கள். எனவே, இந்த பணியும் விரைவில் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story