வேட்பாளர் மரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி: பா.ஜனதா கோட்டை தகர்ந்தது


வேட்பாளர் மரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி: பா.ஜனதா கோட்டை தகர்ந்தது
x
தினத்தந்தி 14 Jun 2018 5:26 AM IST (Updated: 14 Jun 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா வேட்பாளர் மரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் பா.ஜனதாவின் கோட்டையாக இருந்த ஜெயநகர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக விஜயகுமார் எம்.எல்.ஏ. நிறுத்தப்பட் டார்.அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 4-ந் தேதி அவர் தனது தொகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவர் ஜெயநகர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

3-வது முறையாக அவர் அந்த தொகுதியில் போட்டியிட் டார். இதையடுத்து ஜெயநகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற் கிடையே கர்நாடக சட்ட சபைக்கு தேர்தல் நடந்து முடிந்தது. அதில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11-ந் தேதி தேர்தல் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்பாளராக காளேகவுடா போட்டியிட்டார்.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியில் இருந்து விலகுவதாகவும், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடா அறிவித்தார். இந்த நிலையில் அறிவித்தப்படி கடந்த 11-ந் தேதி ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. இதில் 55 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்த ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் அதே தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தன. ஓட்டு எண்ணிக்கை 13-ந் தேதி(நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை சரியாக 8 மணிக்கு எஸ்.எஸ். எம்.ஆர்.வி. கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் 4 ஓட்டுகளில் பா.ஜனதாவுக்கு 3 ஓட்டுகளும், காங்கிரசுக்கு ஒரு ஓட்டும் கிடைத்தன. தபால் ஓட்டுகளில் பா.ஜனதா முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் சுற்று வாரியாக எண்ணப்பட்டன. மொத்தம் 16 சுற்றுகளில் ஓட்டு எண்ணப்பட்டது.

முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 3,749 ஓட்டுகளும், பா.ஜனதா வேட்பாளர் பிரகலாத் 3,322 ஓட்டுகளும் பெற்றனர். சவுமியா ரெட்டி முதல் சுற்றின் முடிவில் 427 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார். சவுமியா ரெட்டி முதல் சுற்றில் இருந்து கடைசி சுற்று வரை தொடர்ந்து முன்னிலை பெற்றார். 9-வது, 10-வது சுற்றுகளில் சவுமியா ரெட்டி சுமார் 16 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்று முன்னிலை பெற்று இருந்தார். இதன் மூலம் சவுமியா வெற்றி பெறுவது உறுதி என்று பேசப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் பா.ஜனதா வேட்பாளர் பிரகலாத் காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக ஓட்டுகளை பெற்றார். இதனால் காங்கிரஸ் வேட்பாளரின் ஓட்டு வித்தியாசம் தொடர்ந்து சரிந்தபடி இருந்தது. ஆயினும் சவுமியா ரெட்டி தொடர்ந்து முன்னிலை வகித்தபடி இருந்தார். இது காங்கிரசுக்கு சற்று பீதியை உண்டாக்கியது. தோல்வி முகத்தில் இருந்த பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு மீண்டும் துளிர்விட்டது.

இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு இரு கட்சியினரிடையே தொற்றிக்கொண்டது. இறுதியில் அதாவது 16-வது சுற்றின் முடிவில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சவுமியா ரெட்டி 54 ஆயிரத்து 457 ஓட்டுகளும், பா.ஜனதா வேட்பாளர் பிரகலாத் 51 ஆயிரத்து 568 ஓட்டுகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 848 ஓட்டுகள் கிடைத்தன.

பெங்களூரு ஜெயநகர் தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜனதா வசம் இருந்தது. அதற்கு முன்பு அந்த தொகுதி காங்கிரசிடம் இருந்தது. இப்போது இந்த வெற்றி மூலம் பா.ஜனதா வசம் இருந்த ஜெயநகர் தொகுதியை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது. ஜெயநகர் தொகுதி பா.ஜனதா கோட்டையாக மாறி இருந்தது. அந்த கோட்டையை இப்போது காங்கிரஸ் தகர்த்துள்ளது. இந்த ஜெய நகர் தொகுதி தோல்வி பா.ஜனதாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற ராஜராஜேஸ்வரிநகர் மற்றும் ஜெயநகர் ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருக் கிறது. இது பா.ஜனதாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வெற்றி மூலம் கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பலம் 78-ல் இருந்து 79 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் தற்போது 222 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின் பலம் 118 ஆக உள்ளது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரின் ஆதரவும் அடங்கும். சட்டசபையில் குமாரசாமி ராஜினாமா செய்ததால் ராமநகர் தொகுதியும், காங்கிரசை சேர்ந்த சித்து நியாமேகவுடா மரணம் அடைந்ததை அடுத்து ஜமகண்டி தொகுதியும் காலியாக உள்ளது. அந்த தொகுதிகளுக்கு அடுத்த ஓரிரு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

Next Story