சட்டத்துக்கு புறம்பாக மண் எடுக்கப்படுவதை கண்டித்து குளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்


சட்டத்துக்கு புறம்பாக மண் எடுக்கப்படுவதை கண்டித்து குளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2018 11:00 PM GMT (Updated: 14 Jun 2018 9:37 PM GMT)

சட்டத்துக்கு புறம்பாக மண் எடுக்கப்படுவதை கண்டித்து குளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காரைக்குளத்தின் மூலம் சுமார் 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. காட்டு வாரி வழியாக இந்த குளத்திற்கு மழைநீர் வந்து சேரும். தற்போது அந்த குளத்தில், உரிய அனுமதியில்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தோண்டி லாரிகளில் எடுத்து சென்று விற்கப்பட்டு வருகிறது.

அப்படி மண் எடுக்கப்படுவதன் மூலம் காரைகுளத்தில் இருந்து குமிழி மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாது. அதனால் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற் படும் என அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

இதனை தடுக்கக்கோரி, காந்தலூர் பகுதி விவசாயிகள் தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் சட்டத்துக்கு புறம்பாக மண் வெட்டி எடுக்கப்படுவதை கண்டித்து தாமரைக்குளத்தில் அமர்ந்து காந்தலூரை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இதுகுறித்து இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story