விமானநிலையத்தில் மோதல் சம்பவம்: சீமான் உள்பட 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்


விமானநிலையத்தில் மோதல் சம்பவம்: சீமான் உள்பட 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 14 Jun 2018 11:15 PM GMT (Updated: 14 Jun 2018 9:37 PM GMT)

விமானநிலையத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு படி சீமான் உள்பட 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்று சென்றனர்.

திருச்சி,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடந்த மாதம் 19-ந் தேதி விமானம் மூலம் திருச்சி வந்தனர். அப்போது அவர்களை வரவேற்பதற்காக வந்த இரு கட்சிகளின் தொண்டர்களுக்கு இடையே விமான நிலையத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விமானநிலைய போலீசார் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீதும், ம.தி.மு.க.வினர் மீதும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் வழங்க கோரி சீமான் உள்பட 7 பேர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு 7 பேரும் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி சீமான், அவரது கட்சியை சேர்ந்த பிரபு, கரிகாலன், குகன்குமார், கந்தசாமி, துரைமுருகன், இனியன் பிரகாஷ் ஆகிய 7 பேரும் நேற்று திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 5-ல் சரண் அடைந்தார்கள். 7 பேர் சார்பிலும் தலா 2 பேர் பிணைப்பத்திரம் தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி, மாஜிஸ்திரேட்டு நாகப்பன் உத்தரவிட்டார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

திருச்சி விமானநிலையத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக என் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். அன்றைய தினம் சம்பவ இடத்திலேயே நான் இல்லை. ஆனால் என் மீது 2 வழக்குகள் பொய்யாக புனையப்பட்டுள்ளது. என் மீது இன்று, நேற்று அல்ல. 10 வருடமாக வழக்குகள் போட்டு வருகிறார்கள். இவ்வாறு வழக்கு போடுவது அரசின் இயலாமையையும், தோல்வியையும் தான் காட்டுகிறது. தொட்டதற்கெல்லாம் வழக்கு போட்டு சிறையில் தள்ள நினைக்கிறார்கள்.

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். மொத்தமாக 18 எம்.எல்.ஏ.க்களும் நீக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளிக்கப்பட்டால் இந்த ஆட்சி கேள்விக்குறியாகிவிடும் என்பதால், இப்படி ஒரு தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பாரதீய ஜனதா தான் ஆட்சி நடத்தி வருகிறது.

நீண்டகாலமாக சட்டமன்ற, பாராளுமன்ற ஜனநாயகம் இல்லை. நீதிமன்ற ஆட்சி முறை தான் உள்ளது. நீதிமன்றத்தில் கேட்டு தான் எதனையும் பெறவேண்டிய நிலை உள்ளது. நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை எப்போதோ முடிவுக்கு வந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story