ஊட்டி–குன்னூர் மலைப்பாதையில் பஸ் உருண்டது: விபத்து நடந்த பகுதியில் தடுப்புசுவர் அமைக்க நடவடிக்கை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் நேரில் பேட்டி
பஸ் உருண்டு விபத்துக்குள்ளான ஊட்டி–குன்னூர் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேரில் ஆய்வு செய்த கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை ஆணையர் கூறினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி–குன்னூர் சாலையில் அரசு பஸ் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டோடி விழுந்து கோர விபத்துக்குள்ளானது. இதில் பஸ் கண்டக்டர் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை ஆணையர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி விபத்து ஏற்பட்ட மந்தாடா பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு எப்படி விபத்துக்குள்ளானது குறித்து ஆய்வு செய்தார். மேலும் பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை பார்த்தார். பின்னர் அவர் நீலகிரி வட்டார போக்குவரத்து அதிகாரி லட்சுமிபதி, வாகன போக்குவரத்து ஆய்வாளர் சத்தியகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து இணை ஆணையர் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் கனகராஜ், உதவி கோட்ட மேலாளர் கணேசன் ஆகியோரிடம் விபத்துக்குள்ளான அரசு பஸ் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து ஊட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உதவி கோட்ட பொறியாளர் முருகன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தார். அதன் பின்னர் கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை ஆணையர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:–
நேற்று முன்தினம் ஊட்டியில் இருந்து குன்னூர் சென்ற அரசு பஸ்சின் டிரைவர் விபத்து நடந்த பகுதியில் வலதுபக்கமாக பஸ்சை ஓட்டி சென்று உள்ளார். எதற்காக சென்றார் என்று தெரியவில்லை. மழை பெய்து கொண்டு இருந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம். வலதுபக்கமாக சென்று இருக்கக்கூடாது. என்ன காரணம் என்பதை பஸ் டிரைவரிடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்ள ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போது அவர் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. வேகமாக சென்று இருந்தாலும், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
டிரைவர் மூலம் விபத்து ஏற்பட்டதாக கூறமுடியாது. சில நேரங்களில் தவறு ஏற்படலாம். சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் பாதுகாப்பு தடுப்புச்சுவர் கட்டி இருக்க வேண்டும். அப்படி தடுப்புச்சுவர் இருந்தால் விபத்து ஏற்படும் போது, சுவரில் மோதி வாகனம் சாலையை நோக்கி திரும்பும். 10 டன் எடையுள்ள வாகனம் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால், 50 டன் எடையில் மோதுவது போல் இருக்கும். எனவே, விபத்து ஏற்பட்ட ஊட்டி–குன்னூர் மலைப்பாதை பகுதியில் கான்கிரீட் சுவர் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுத உள்ளேன். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அரசு பஸ்களை முறையாக பராமரிப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.