ஊட்டி மலைப்பாதை விபத்தில் உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய இளைஞர்கள் நேரில்பார்த்த பெண் உருக்கமான தகவல்


ஊட்டி மலைப்பாதை விபத்தில் உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய இளைஞர்கள் நேரில்பார்த்த பெண் உருக்கமான தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2018 10:30 PM GMT (Updated: 15 Jun 2018 6:48 PM GMT)

ஊட்டி மலைப்பாதை விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை, சேற்றில் வழுக்கி விழுந்து இளைஞர்கள் காப்பாற்றினர் என்று நேரில் பார்த்த பெண் உருக்கமாக கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதால், சாலைகள் அனைத்தும் ஏற்ற, இறக்கங்களாகவே காணப்படுகிறது. ஊட்டி–குன்னூர், ஊட்டி–கோத்தகிரி, ஊட்டி–மஞ்சூர், ஊட்டி–கூடலூர் உள்ளிட்ட சாலைகள் வளைந்து, நெளிந்து செல்கிறது. அபாயகரமான செங்குத்தான கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த பாதையில் வாகனங்களை முதல் அல்லது இரண்டாவது கியரில் மட்டுமே இயக்க வேண்டும். விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேகக்கட்டுப்பாடு விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதன்படி, சாலைகளில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இதுகுறித்து ஆங்காங்கே சாலையோரங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆகவே மலைப்பாதையில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பெரும்பாலும் அதிக வேகத்தில் செல்வதில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊட்டி–குன்னூர் சாலையில் மந்தாடா பகுதியில் அரசு பஸ் சென்று கொண்டு இருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து நடந்தபோது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து பார்த்தனர். அதில் மந்தாடா புதுலைன் பகுதியை சேர்ந்த சாந்தி (43) என்பவரும் ஒருவர். அவர் கூறியதாவது:–

நேற்று முன்தினம் 11.35 மணியளவில் மழை பெய்து கொண்டு இருந்ததால் வீட்டுக்குள் இருந்தேன். அப்போது பொதுமக்களின் சத்தம் அதிகமாக கேட்டது. அதன் பின்னர் வெளியே வந்து பார்த்த போது, அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து உருக்குலைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த வழியாக வாகனங்களில் வந்த இளைஞர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பள்ளத்தில் இறங்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களை மீட்டு மேலே கொண்டு வரும் வழி விவசாய தோட்டம் என்பதால் சேறும், சகதியுமாக இருந்தது.

அப்போது சில இளைஞர்கள் வழுக்கிவிழுந்தனர். இருந்தபோதிலும் மீண்டும் எழுந்து, உயிர்களை காப்பாற்றவேண்டும் என்கிற துடிப்போடு, துவண்டு விடாமல் படுகாயம் அடைந்தவர்களை பத்திரமாக மேலே கொண்டு வந்து ஆம்புலன்சுகளில் ஏற்றி ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ் பள்ளத்தில் விழுந்த போது சத்தம் எதுவும் கேட்கவில்லை. மந்தாடா புதுலைன் பகுதியில் நடைபாதை வசதி, மின்விளக்கு வசதி இல்லை. ஒருவேளை இரவில் சம்பவம் நடந்து இருந்தால் மக்களை காப்பாற்றுவது கடினம். புதுலைன் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு உயிர் பலியாவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story