விருத்தாசலம் பகுதி கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்


விருத்தாசலம் பகுதி கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Jun 2018 4:15 AM IST (Updated: 16 Jun 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் பகுதி கடைகளில் காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் நகர பகுதியில் மளிகை கடைகள், உணவு பொருட்கள் விற்பனை கடைகள், ஏஜென்சிகள், பல்பொருள் அங்காடிகள், இனிப்பகங்கள், பழ அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும், மளிகை கடைகளிலும் ஆய்வு செய்தார். அப்போது காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான பொருட்கள் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவு பொருட்களை பறிமுதல் செய்தார்.

மேலும் உணவு பொருட்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதா? காலாவதி தேதிக்குள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், காலாவதியான கெட்டுப்போன உணவு பொருட்களை வியாபாரிகள் யாரும் விற்பனை செய்யக்கூடாது. அதை மீறி விற்பனை செய்தால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு பாதுகாப்புத்துறையின் அனைத்து விதிகளையும் வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தாலோ, விதிகளை மீறினாலோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை அறவே தவிர்க்க வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது விருத்தாசலம் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story