வடலூரில் இடைக்கால மக்களின் வாழ்விடப்பகுதி கண்டுபிடிப்பு சோழர் கால நாணயங்களும் கிடைத்தன


வடலூரில் இடைக்கால மக்களின் வாழ்விடப்பகுதி கண்டுபிடிப்பு சோழர் கால நாணயங்களும் கிடைத்தன
x
தினத்தந்தி 16 Jun 2018 4:30 AM IST (Updated: 16 Jun 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

வடலூரில் இடைக்கால மக்களின் வாழ்விடப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோழர் கால நாணயங்களும் கிடைத்தன.

வடலூர்,

வடலூரில் உள்ள கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு பகுதியில் பழமையான காளிகோவில் உள்ளது. இந்த கோவிலையும், அதனை சுற்றியுள்ள 5 ஏக்கர் பரப்பளவிலும் ஆத்தூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான சிவராமகிருஷ்ணன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழு தலைவர் கோமகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இடைக்கால மக்கள் வாழ்ந்ததற்கான வாழ்விட பகுதியை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது பற்றி அவர்கள் கூறியதாவது:–

வடலூர் காளிகோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவையின் சிற்பம் உள்ளது. 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட நீள்செவ்வக வடிவ கற்பலகையில் புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் முதுகுபுறத்தில் அம்புத்தூரிகை உள்ளது. கொற்றவையின் இடுப்பில் அணியப்பட்டுள்ள இடைக்கச்சையானது குஞ்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டு எருமைத்தலை மீது ஒரு காலை நிலையாக ஊன்றியும், மற்றொரு காலை சற்று மடக்கி வைஷ்ணவ ஆசனத்தில் நின்றவாறு பக்தர்களுக்கு காட்சி அளிப்பதாக உள்ளது.

இச்சிலையில் முகத்தில் பல்லவர் கால கலைப்பாணியும், உடல் பகுதியில் முற்கால சோழர் கலைப்பாணியின் தாக்கமும் உள்ளது. எனவே இந்த சிலை காலம் கி.பி.9 அல்லது 10–ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும். கொற்றவை சிற்பத்தின் மூலம் பல்லவர்களுக்கு பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பல்லவ கலைப்பாணியை அப்படியே ஏற்றுக்கொண்டு தங்கள் கலைப்பாணியில் சிறு, சிறு மாற்றங்களை செய்து சோழர்கலை மரபு என்ற தனி கலைப்பாணியை உருவாக்கினர் என்பதற்கு இச்சிற்பமே சிறந்த சான்றாக உள்ளது.

வடலூர் காளிகோவிலில் இருந்து கிழக்கு மேற்காக 5 ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்பாட்டு பகுதி காணப்படுகிறது. அப்பகுதியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்போது இடைக்கால மக்கள் பயன்படுத்திய செங்கற்கள் கிடைத்துள்ளன. சிகப்பு நிற பானையோடுகள், ட வடிவ கூரை ஓடுகள், தரைதள பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கிடைக்கப்பட்டுள்ள ஓடுகளின் அமைப்பை ஒத்துள்ளது. இங்கு கிடைத்த சான்றுகளை ஆய்வு செய்ததில் கி.பி.9–ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13–ம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

வடலூர் காளிகோவில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் நடைபெற்ற கள ஆய்வில் மண்ணின் மேற்பரப்பில் இருந்து ராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட 12 செப்பு நாணயங்கள் கிடைத்தன. இந்நாணயத்தின் முன்பகுதியில் நிற்கும் மனித உருவமும், அதன் இடதுபக்கத்தில் விளக்கு ஒன்றும் உள்ளது. பின்பகுதியில் அமர்ந்த மனித உருவத்தின் கையருகே ‘ஸ்ரீராஜராஜ’ என்று நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை ஈழக்காசு என்றும் அழைப்பர். இந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் 8 கிராம் எடை கொண்டவைகளாகும். கி.பி.985 முதல் கி.பி.1014 வரை சோழ பேரரசின் மாமன்னனாக விளங்கிய முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட இந்நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் வடலூர் பகுதியில் கிடைத்துள்ளதால் சோழர் காலத்தில் இப்பகுதி சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.

இவ்வளவு வரலாற்று பின்புலத்தை கொண்ட வடலூர் பகுதியில் இதுவரை சோழர் காலத்தை சார்ந்த கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வடலூர் அருகே உள்ள சந்தவெளிப்பேட்டை மற்றும் கீழூர் கிராமத்தில் 3 சோழர் காலத்தை சார்ந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. மேலும் வடலூரை சுற்றியுள்ள மருவாய், சந்தவெளிப்பேட்டை, பெரியகோவில்குப்பம், பூசாளிக்குப்பம் ஆகிய ஊர்களில் கி.பி. 9–ம் நூற்றாண்டு முதல் கி.பி.13–ம் நூற்றாண்டு வரை இடைக்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story