ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை 7 பேர் கைது


ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை 7 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2018 4:30 AM IST (Updated: 16 Jun 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

அம்பத்தூர்,

சென்னை கொரட்டூர் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன்(வயது 26). ரவுடியான இவர், ஆட்டோவும் ஓட்டி வந்தார். இவருடைய அண்ணன் அப்பன் ராஜ்.

இவர்களுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜீவகன்(54) என்பவருக்கும் பணம் கொடுக் கல், வாங்கல் தகராறில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஜீவகனின் மகன் ஆகாஷ்(25) என்பவரை வெட்டிக்கொலை செய்ய முயன்றனர்.

இந்த வழக்கில் கொரட்டூர் போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அரவிந்தன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

அப்போது அவர், நாங்கள் சிறைக்கு போக காரணமாக இருந்த ஜீவகன்-ஆகாஷ் இருவரையும் வெட்டிக்கொலை செய்யப்போவதாக மிரட்டி வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் கொரட்டூர் கங்கையம்மன் கோவில் மெயின் ரோட்டில் நடந்து வந்த ரவுடி அரவிந்தனை, ஒரு மர்ம கும்பல் சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது.

இதில் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அரவிந்தன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார், கொலையான அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் ஜீவகன், அவருடைய மகன் ஆகாஷ் இருவரும் கூலிப்படையினருடன் சேர்ந்து அரவிந்தனை வெட்டிக்கொலை செய்தது தெரிந்தது.

இதையடுத்து அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் பாடி ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்த ஜீவகன், அவருடைய மகன் ஆகாஷ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(26), பிரசன்னா(24), மணி, முனுசாமி, திருநா ஆகிய 7 பேரை கொரட்டூர் போலீசார் கைது செய்தனர்.

கைதான ஜீவகன், ஆகாஷ் இருவரும் அளித்த வாக்குமூலத்தில், “அரவிந்தன் எங்களை கொலை செய்ய திட்டமிட்டார். இதை அறிந்த நாங்கள், அதற்கு முன்னதாகவே அவரை கொலை செய்து விட முடிவு செய்தோம். அதன்படி கூலிப்படையினருடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்டினோம்” என்று கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story