அவினாசி அருகே கலப்பட எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு 4500 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்


அவினாசி அருகே கலப்பட எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு 4500 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Jun 2018 4:15 AM IST (Updated: 16 Jun 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே கலப்பட எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது நிறுவனத்தில் இருந்து 4500 லிட்டர் சமையல் எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவினாசி,

திருப்பூரில் நேற்று முன்தினம் முறைகேடாக இயங்கி வந்த சமையல் எண்ணெய் நிறுவனம் ஒன்றை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பின்னர் அங்கிருந்து 2 லிட்டர் சமையல் எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அவினாசி அருகே சமையல் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்த நிறுவனம் ஒன்று அதிகாரிகள் சோதனையின் போது சிக்கி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:–

அவினாசி அருகே உள்ள ஆட்டையாம்பாளையத்தில் ராணி டிரேடர்ஸ் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை ஆட்டையாம்பாளையம் பாரதிநகரை சேர்ந்த மனோகரன் என்பவரது மனைவி ராணி (வயது 50) என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு நேற்று அதிரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஸ்ரீ கணபதி கடலை எண்ணெய் என்ற லேபிள்கள் ஒட்டப்பட்டு இருந்த 100 மில்லி லிட்டர் பாக்கெட், ½ லிட்டர் பாக்கெட் மற்றும் 1 லிட்டர் பாக்கெட்டுகள் இருந்தன. அந்த எண்ணெய் பாக்கெட்டுகளை உடைத்து அதில் அடைக்கப்பட்டு இருந்த எண்ணெய் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது பாக்கெட்டினுள் கடலை எண்ணெய்க்கு பதிலாக தரம் குறைந்த பாமாயில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதே போல் மைத்ரா கோல்டு கடலை எண்ணெய் என்று லேபிள் ஒட்டப்பட்டு இருந்த பாக்கெட்டுகளை உடைத்து பார்த்தபோது அதிலும் 80 சதவீத பாமாயிலும், 20 சதவீதம் கடலை எண்ணெய்யும் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் ஸ்ரீகணபதி சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளில் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமம் எண் அச்சிடப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆலய தீபம் நல்லெண்ணெய் என்ற பெயரில் ரைஸ் பிராண்ட் எண்ணெயை அடைத்து நல்லெண்ணெய் என்று விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:–

ஸ்ரீ கணபதி சமையல் எண்ணெய், மைத்ரா கோல்டு கடலை எண்ணெய் ஆகிய எண்ணெய்கள் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவு பெறப்படுவதை தொடர்ந்து மேற்கண்ட நிறுவனத்தின் மீது சட்டரீதியான வழக்கு பதிவு செய்யப்படும். ஸ்ரீகணபதி சமையல் எண்ணெய், மைத்ரா கோல்டு கடலை ஆகிய இரண்டு பிராண்டுகளிலும் 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4½ லட்சமாகும். மேலும் போலியான கலப்பட எண்ணெய் விற்பனை செய்ததற்கு உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூரில் நேற்று முன்தினம் முறைகேடாக சமையல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வந்தது தெரியவந்த நிலையில், அவினாசி அருகே மேலும் ஒரு கலப்பட சமையல் எண்ணெய் நிறுவனம் அதிகாரிகள் சோதனையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story