சிறுத்தைப்புலி தாக்கி பெண் சாவு: வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி சாலை மறியல்


சிறுத்தைப்புலி தாக்கி பெண் சாவு: வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Jun 2018 4:30 AM IST (Updated: 16 Jun 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சிறுத்தைப்புலி தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார். எனவே வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி 8 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே காஞ்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவு குடியிருப்பை சேர்ந்தவர் மதி. தேயிலைத் தோட்ட தொழிலாளி. இவருடைய மனைவி கைலாசவதி (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வீட்டிற்கு முன்புறம் துணி துவைத்து கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள புதர் செடிக்குள் இருந்து திடீரென்று வந்த சிறுத்தைப்புலி கைலாசவதியின் கழுத்தை கடித்து புதர் செடிக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டனர். உடனே சிறுத்தைப்புலி கைலாசவதியின் உடலை புதர் செடிக்குள் போட்டுவிட்டு ஓடி விட்டது.

இது குறித்த தகவலின் பேரில் வால்பாறை வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கைலாசவதியின் உடலை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருடைய உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கைலாசவதியின் கணவர் மற்றும் 3 மகன்கள், ஒரு மகளுடன் காஞ்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்து முன்னணியினர் மற்றும் உறவினர்கள் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி நேற்று காலை 8 மணி அளவில் வால்பாறை– பொள்ளாச்சி ரோடு தபால்நிலையம் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள், ஆனைமலை புலிகள் காப்பகத்தை தடை செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக வால்பாறை –பொள்ளாச்சி சாலையில் அண்ணாசிலை முன்புறம், காந்தி சிலை பஸ்நிறுத்தம், பழைய பஸ்நிலையம், ஸ்டேன்மோர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் காஞ்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள், அரசியல் கட்சியினருடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலுக்கு ஆதரவு தெரிவித்து வால்பாறை நகரில் ஒரு சில கடைகளும் அடைக்கப்பட்டன.

மறியல் காரணமாக வால்பாறை நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதைத்தொடர்ந்து தொழிலாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு ஏற்பட வில்லை.

இதற்கிடையில் மதியம் 2 மணி அளவில் வால்பாறையில் மழை பெய்தது. ஆனாலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லவில்லை. அவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டும், தார்ப்பாயை தூக்கிப்பிடித்துக்கொண்டும் சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இதையடுத்து மதியம் 3 மணியளவில் வால்பாறை போலீஸ் நிலையத்தில் கைலாசவதியின் கணவர் மகன்கள் மற்றும் மகளை அழைத்து எம்.எல்.ஏ. தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினருடன் இணைந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, சிறுத்தைப்புலி கடித்து இறந்த கைலாசவதிக்கு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் நஷ்டஈடு வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். அதிகப்படியான நஷ்டஈடு தொகை வழங்க வேண்டும். வனவிலங்குகளிடம் இருந்து எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

வனத்துறையினர் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை கூண்டுவைத்து உடனே பிடிக்க வேண்டும். வால்பாறை பகுதிக்கு புலிகள் காப்பகத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அதிக எண்ணிக்கையில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் மத்தியில் எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு பேசியதாவது:–

வருகிற 25–ந் தேதி சட்டசபையில் வால்பாறையில் நடைபெற்ற சிறுத்தைப்புலி தாக்குதல் சம்பவம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து பேசுகிறேன். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பேசி அரசு வேலை வழங்குவது, தெருவிளக்குகள் அமைப்பது, வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து எஸ்டேட் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் வலியுறுத்துவேன்.

அனைத்து எஸ்டேட் நிர்வாகத்தினரும், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து மக்களை காக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறுத்தைப்புலியின் தாக்குதலுக்கு உள்ளான கைலாசவதி குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் வழங்கப்படும் தொகையில் முதல்கட்ட நிவாரணத்தொகையான ரூ.50 ஆயிரத்தையும், தனது நிவாரணத்தொகையாக ரூ10 ஆயிரத்தையும் எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு வழங்கினார். இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய மாலை 4 மணி வரை 8 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கைலாசவதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கைலாசவதி உடல் காஞ்சமலை எஸ்டேட் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


Next Story