‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பெற்றோரிடம் திருமணத்தை மறைத்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பெற்றோரிடம் திருமணத்தை மறைத்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 17 Jun 2018 3:45 AM IST (Updated: 17 Jun 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பெற்றோரிடம் திருமணத்தை மறைத்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆனைக்கவுண்டனூரை சேர்ந்தவர் பெரியசாமி. அவருடைய மகன் கோபால்சாமி (வயது 27). இவர் பி.இ. முடித்துவிட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியாளராக வேலை பார்த்தார்.

அப்போது அதே நிறுவனத்தில் குடியாத்தத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மகள் செல்வியும் (26) வேலை பார்த்தார். 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு இது நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 23–3–2016 அன்று தீர்த்தகிரி முருகன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் வேலூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று தங்களுடைய திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். அதன்பின்னர் 2 பேரும் பிரிந்து அவரவர் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார்கள். இவர்கள் திருமணம் செய்தது 2 பேரின் வீட்டுக்கும் தெரியாது.

அதாவது ‘அலைபாயுதே’ சினிமா பட பாணியில் செல்வி தனது தாலியை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தார். எனினும் 2 பேரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தார்கள். இதற்கிடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோபால்சாமி சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் செல்விக்கு அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் பயந்து போன அவர் இதுகுறித்து கோபால்சாமிக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கோபால்சாமியும், செல்வியும் வேலூர் அருகே உள்ள பள்ளிக்கொண்டா பெருமாள் கோவிலுக்கு சென்று மாலை மாற்றிக்கொண்டனர்.

பின்னர் காதல் ஜோடியினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்கள். இதுகுறித்து போலீசார் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.


Next Story