ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு


ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு
x
தினத்தந்தி 17 Jun 2018 4:45 AM IST (Updated: 17 Jun 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஸ்கூட்டரில் சென்ற போது அரசு பஸ் மோதியதில் கல்வித்துறை முன்னாள் அதிகாரி பரிதாபமாக இறந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் இந்த பரிதாப சம்பவம் நேர்ந்தது.

நாகர்கோவில்,

அரசு பஸ் மோதியதில் கல்வித்துறை முன்னாள் அதிகாரி பரிதாபமாக இறந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் கவிமணிநகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 72). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி மாவட்ட அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மகன் சுப்பிரமணியன். இவர் குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தாழக்குடியில் கால்நடை டாக்டராக பணியாற்றி வருகிறார். நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து பீச்ரோடு செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனையும் நடத்தி வருகிறார்.

அந்த மருத்துவமனைக்கு அவருடைய தந்தை சிவகுமார் தினமும் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று காலை சிவகுமார் சுசீந்திரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டரை ஓட்டி வந்தார். இடலாக்குடி அருகே கரியமாணிக்கபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது, பின்னால் கன்னியாகுமரியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பராதவிதமாக ஸ்கூட்டரின் மீது மோதியது.

இதில் நிலைகுலைந்த சிவகுமார் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால், அவரது ஹெல்மெட் கழன்று செல்லவில்லை. ஹெல்மெட் தலையில் இருந்தாலும் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெர்னார்டு சேவியர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சிவகுமாரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சிவகுமார் இறந்த தகவலை அறிந்த அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவரான முளகுமூடு பகுதியைச் சேர்ந்த சகாயராஜை (43) தேடி வருகிறார்கள்.

விபத்து தொடர்பாக போலீசார் கூறும் போது, பஸ் மோதி நிலைதடுமாறி சிவகுமார் விழுந்த வேகத்தில் ஹெல்மெட் உடைந்து அதன் ஒரு பகுதி, சிவகுமாரின் தலைப்பகுதியில் குத்தியதுபோன்ற காயம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இந்த படுகாயம்தான் அவர் உயிரை பறித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றவருக்கு நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story