சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான கார்: குழந்தை பலி; 3 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே சாலையில் உருண்டு கார் விபத்துக்குள்ளானதில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தம்பதி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேடசந்தூர்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சாய்நாதன் (வயது 49). அவருடைய மனைவி ஆஷா (37). இவர்களுக்கு விஷ்ணு (3) என்ற மகனும், மான்யா (2) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். பெங்களூருவில் உள்ள ஜெனரேட்டர் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் சாய்நாதன் பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் அங்கு குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இந்தநிலையில் மகள் மான்யாவுக்கு பழனி முருகன் கோவிலில் மொட்டை எடுக்க சாய்நாதன் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் பழனிக்கு புறப்பட்டார். காரை சாய்நாதன் ஓட்டினார். நேற்று மதியம் கரூர்–வேடசந்தூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி கணவாய் மேடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதுவது போல் கார் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாய்நாதன் காரை திருப்பியுள்ளார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சினிமா காட்சி போல சாலையில் பல முறை உருண்டது. இதையடுத்து சாலை ஓரத்தில் இருந்த பாறையில் மோதி நின்றது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இடிபாடுகளில் சிக்கி சாய்நாதன் மற்றும் அவருடைய மனைவி, குழந்தைகள் படுகாயம் அடைந்து கூச்சல் போட்டனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டனர். இதில் சாய்நாதன், அவருடைய மகன் விஷ்ணு ஆகியோர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் ஆஷா, மான்யா ஆகியோர் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை மான்யா பரிதாபமாக இறந்தது. இந்த விபத்து குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.