சித்தராமையாவின் பேச்சால் கூட்டணி ஆட்சியில் புதிய சர்ச்சை


சித்தராமையாவின் பேச்சால் கூட்டணி ஆட்சியில் புதிய சர்ச்சை
x
தினத்தந்தி 16 Jun 2018 11:55 PM GMT (Updated: 16 Jun 2018 11:55 PM GMT)

காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை முன்னெடுத்து செல்வதால் புதிய பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இது கூட்டணி ஆட்சியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் முதலாவது பட்ஜெட் அடுத்த மாதம்(ஜூலை) முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும் தான் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், பட்ஜெட்டில் நல்ல பல திட்டங்களை அறிவித்தால் மக்களிடம் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனாலும் கூட்டணி ஆட்சியின் முதல் பட்ஜெட் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்துள்ளன. கூட்டணி ஆட்சியை எந்த விதமான பிரச்சினையும் இன்றி முன்னெடுத்து செல்ல ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சார்பில் நடந்த முதல் கூட்டத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முன்னெடுத்து செல்வது என்றும், 2 கட்சிகளும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள பொதுவான திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில், 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முன்னெடுத்து செல்ல முடிவு எடுத்திருப்பதால் தற்போது கூட்டணி ஆட்சியில் புதிய பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. தேவையெனில் சட்ட விதிமுறைகளின்படி குமாரசாமி துணை பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம். துணை பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவித்து, அதற்கான நிதியை ஒதுக்க சட்டத்தில் இடம் உள்ளது. நான் நிதி மந்திரியாக இருந்ததால் சொல்கிறேன். அதனால் புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய அவசியமில்லை என்பது என்னுடைய கருத்தாகும்.

உயர் கல்வித்துறை மந்திரிக்கு ஆலோசனைகள் வழங்க சிறப்பு ஆலோசகரை நியமிக்க அரசு முடிவு செய்திருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. அரசின் நிர்வாகத்தில் தலையிட மாட்டேன். அதில் எனக்கு விருப்பமும் இல்லை. சிறப்பு ஆலோசகர் நியமிப்பது, மற்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அந்த சட்ட மசோதா காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். இது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருப்பதை வரவேற்கிறேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதற்கிடையில், முதல்-மந்திரி குமாரசாமி அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சித்தராமையா கூறி இருப்பது ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சித்தராமையாவின் பேச்சு, கூட்டணி ஆட்சியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story