மானாமதுரை அருகே ஆதனூர் கண்மாயை தூர்வாரியதில் முறைகேடு விவசாயிகள் குற்றச்சாட்டு


மானாமதுரை அருகே ஆதனூர் கண்மாயை தூர்வாரியதில் முறைகேடு விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Jun 2018 4:30 AM IST (Updated: 18 Jun 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே ஆதனூர் கண்மாயை தூர்வாரியதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ளது ஆதனூர். இந்த கிராமத்தில் முற்றிலும் விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நெல், வாழை, கத்தரிக்காய், மிளகாய், வெள்ளரி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மழைநீர் மற்றும் வைகை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் ஆதனூர் கண்மாய்க்கு நீர்வரத்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த கண்மாய் தூர்வாரப்படாததால் தண்ணீரை தேக்கிவைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். இதனையடுத்து உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 800 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஏற்கனவே உள்ள தண்ணீர் வெளியேறும் 2 மடைகளை சீரமைப்பதுடன் புதிதாக ஒரு மடையை உருவாக்கி தருவதாகவும், கண்மாய் தூர்வாரியதுடன் கரையை பலப்படுத்துவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் மடைகள் எதுவும் சரிவர சீரமைக்கப்படவில்லை. மடைகளில் இருந்து தண்ணீர் வெளியேற வழியே இல்லை. இதனால் கண்மாயில் தண்ணீர் தேங்கினாலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வழியில்லாத நிலை உள்ளது. ரூ.35 லட்சம் செலவு செய்தும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஒருவார காலமாக பெய்த மழை காரணமாக கண்மாய் கரையில் போடப்பட்ட மண் கரைந்து ரோட்டிற்கு வந்து விட்டதால் வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்துகளை சந்தித்து வருகின்றன. கண்மாயில் புதிய மடையும் கட்டப்படவில்லை. கண்மாயின் உட்புறம் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அவற்றையும் அரைகுறையாக நிறுத்திவிட்டனர் என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே மாவட்ட கலெக்டர், ஆதனூர் கண்மாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்து முறைகேடு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story