கூடலூர், பந்தலூர் தாலுகா விளைநில உரிமையாளர்கள் யானை வழித்தடங்களில் மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும், கலெக்டர் அறிவுரை


கூடலூர், பந்தலூர் தாலுகா விளைநில உரிமையாளர்கள் யானை வழித்தடங்களில் மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும், கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 18 Jun 2018 3:45 AM IST (Updated: 18 Jun 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூர் தாலுகா விளைநில உரிமையாளர்கள் யானை வழித்தடங்களில் மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரை கூறி உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் வசிக்கும் பொதுமக்கள் மனித–வனவிலங்கு மோதல்களை குறிப்பாக யானை தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்திக் கொள்ளவும், பொதுமக்களின் சொத்துகளை பாதுகாக்கவும், உயிரிழப்பினை தவிர்க்கவும் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இரவு நேரங்களில் குறிப்பாக தற்போதைய மேகமூட்டமான மற்றும் பனிக்காலங்களில் வெளியே நடமாடும் போது கையில் அவசியர் டார்ச்லைட் உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.முடிந்தவரை இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். மது அருந்தி விட்டு இருட்டு நேரத்தில் தனியே நடமாட வேண்டாம். அருகில் உள்ள வனப்பகுதிக்கும் செல்ல வேண்டாம்.

வீட்டின் அருகில் வாழை, பலா, கரும்பு, பாக்கு போன்ற யானைகள் விரும்பி உண்ணும் தாவரங்கள் வளர்ப்பதை தவிர்க்கவும். தற்போதுள்ள இம்மரங்களின் அருகில் இரவில் செல்ல வேண்டாம். ஏற்கனவே அரசுத்துறைகள் மூலமாக அமைந்துள்ள வேலிகள், யானை தடுப்பு அகழிகளை சேதப்படுத்த வேண்டாம். கூடலூர், பந்தலூர் தாலுகா விளைநில உரிமையாளர்கள் யானை வழக்கமாக செல்லும் வழித்தடங்களில் வேலி அமைத்து, அதை அடைக்க முயல்வதை தவிர்க்க வேண்டும். வன விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது. மேலும் உணவு கழிவுகளை பாதையில் போடக்கூடாது. வெளி ஊர்களுக்கு வேலைக்குச் சென்றாலோ உறவினர் வீட்டிற்குச் சென்றாலோ மாலை இருட்டுவதற்குள் வீடு திரும்புவது நல்லது. வீட்டின் அருகில் வன விலங்குகள் வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். குறிப்பாக அருகில் உள்ள பகுதிவனக்காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கவும். மேலும் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் 04262–261302, கூடலூர், ஓவேலி வனச்சரக அலுவலர் 9443523414, பந்தலூர் வனச்சரக அலுவலர் 9488520346, பிதர்காடு சேரம்பாடி வனச்சரக அலுவலர் 890377161 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story